வீட்டு வேலைகளாலும் அலுவுலகப்  பணிகளாலும் ஆயிரத்தில் ஒருவனுக்காக இந்தப் பதிவை தாமதமாக வெளியிடுகிறேன்!!! பொறுமையோடு காத்திருந்த நண்பர்களுக்கு நன்றி!!!

போன பகுதி முழுவதும் இந்தப்படம் சொல்லவந்த கருத்துக்களை!!!! மன்னிக்கவும், நான் புரிந்து கொண்ட கருத்துக்களை பதிவிட்டிருந்தேன்!!! இதில் அந்த படத்தை பேசவைத்தவர்களை முடிந்தளவு   நினைவு கூற விழைகிறேன்!!!

சற்று யோசித்து பாருங்கள்!!!, இந்த படத்தின் ஹீரோ யாரென்று??? கார்த்தி, ரீமா சென் மற்றும் பார்த்திபன் அவர்களின் நடிப்பா??, செல்வாவின் இயக்கமா??, சந்தானத்தின் கலை அமைப்பா?? ராம்ஜியின் ஒளிப்பதிவா??. இல்லை ஜி.வி.பிரகாஷின் இசையா???   என்னைப்பொறுத்தவரையில் இவர்கள் யாருமில்லை!!

காடு, மேடு, மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது இவர்களுடன் ஏறக்குறைய இரண்டு வருடம் பயணம் செய்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் உடம்பு முழுதும் தன்னை வருத்திக்கொண்டு கருப்போ..சிவப்போ… தனக்கு கொடுத்ததை முழுதும் அப்பிக்கொண்டு படத்தில் ஒரு செகண்ட் வரப்போகும் தன் பெயருக்காக ராப்பகலாக உழைத்த அந்த துணை நடிகர்கள், இவர்கள் தான் என்னைப்பொறுத்தவரை நிஜ ஹீரோக்கள்!!!எஞ்சியவர்கள்:

அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் படிப்பை முடித்து விட்டு சினிமாவில் தன் பங்களிப்பை உதவி இயக்குனராக தொடர மணிரத்னத்தை அணுகினார்!!! அமெரிக்க வாசமும் இவரது உடல்வாகையும் பார்த்து “ஆயுத எழுத்து” படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கச்சொல்ல, ஏனோ தனக்கு நடிப்பு வேண்டவே…வேண்டாம்!!!!….என அப்போது மறுத்த இவர், தன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடிக்க சம்மதித்த படம் தான் அமீரின் “பருத்திவீரன்“. அவர் கார்த்தி!!!

பருத்திவீரன்”, எந்த ஒரு அறிமுக நாயகனுக்கும் அமையப்பெறாத ஒரு படம்….

இப்போது முன்னணியில் உள்ள விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைவருக்கும், முதல் படம் என்பது வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும்!! ஆனால் இவருக்கு அப்படி அல்ல, பருத்தி வீரனுக்கு பிறகு இவரது நடிப்பில் ஏதும் மிச்சம் உண்டா??? என அனைவரையும் கேட்க வைத்தது!!! ஆம், தன் உயிர், உடல், மொழி என அனைத்தையும் வாரிக் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்!!!

பருத்திவீரனின் மாபெரும் அங்கீகாரத்திற்கு பின் இவர் இணைந்தது செல்வாவுடன்!!! “இது மாலை நேரத்து மயக்கம்” என்ற பெயருடன் தொடங்கப்பட்ட அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட “ஆயிரத்தில் ஒருவன்” உதயமானது!!!!

முந்தைய படத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி அசத்திய இவர் இந்தப்படத்தில் சென்னையில் வாழும் சேரிக்காரனாக வாழ்ந்திருப்பார்!!! “முத்து” என்ற பெயருடன் சட்டையை அக்குளில் வைத்துக்கொண்டு சரக்கு பாட்டில் மற்றும் எம்.ஜி.ஆர் பாட்டுடன் அறிமுகமாகும் இவரது ராஜாங்கம் படம் முடியும்வரை மிளிர்கிறது!!!!இங்கு நான் குறிப்பிடவேண்டியது, முத்துவின் (கார்த்தி) பாத்திரப்படைப்பு பற்றி.

இவனொன்றும், காளை முதுகில் சவாரி செய்து தனி ஒருவனாய் ஒரு ஊரையே காப்பாற்றும் சூப்பர் ஹீரோ இல்லை, அதேபோல் 100-அடி கற்ச்சிலையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தும் ஆகாய சூரனில்லை மற்றும் தன் துணைவியைத் தவிர மற்ற பெண்களை தாயாக என்னும் உத்தம புருஷனுமில்லை!!!!

தன் இச்சைக்காக பெண்கள் பின்னே அலைகிறான், காட்டுவாசி மனிதர்களால் தன் சகாக்கள் கொல்லப்படும்போது ஓடி ஒளிந்து கொள்கிறான்!!! ராணுவ அதிகாரி அழகம் பெருமாளாலும் ரீமா சென்னாலும் தொடர்ந்து அவமானப் படுத்தப்படுகிறான்!!! தன்முன் ஒரு இனமே குழி தோண்டி புதைக்கப்படும்போது கூட அவனால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது!!!

மொத்தத்தில், கண் முன்னே எவ்வளவு அநியாயம் நடந்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் தன் கையாலாகாத நிலையை எண்ணி அழும் ஒரு சமகால மனிதனே இந்த முத்து!!!

இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஒரு இம்மி அளவுகூட பிசகாமல் அப்படியே திரையில் கொண்டுவந்திருப்பார் கார்த்தி!!! செல்வாவின் ஹீரோக்கள் எப்போதும் நல்லதையே யோசிக்கும் உதாரண புருஷர்களில்லை, அவர்களுக்கும் தோல்விகள், பலவீனம், இயலாமை என பலதும் இருக்கும். இதனாலேயே 7/G கதிரோடவும், காதல் கொண்டேன் வினோத்தோடவும் நம்மை பொருத்திப்பார்க்க முடிகிறது!!! அதுபோல் முத்துவும் நம்மில் ஒருவன்!!!

அடுத்ததாக ரீமா சென், ஆண்ட்ரியா வீட்டில் HI-FI லேடியான அறிமுகமாகட்டும், சோழர்கள் குகையில், தூதுவன் நான் தான் என அதகளப்படுத்தும் காட்சியாகட்டும்!!! அனைத்திலும் இவரது நடிப்பு அருமை!!! இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வர்யா தனுஷ்!!!இதுவரை எத்தனையோ அரச படங்களை பார்த்திருப்போம்!! எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என பலரும் விளையாடிய களம் அது! அந்தப்படங்களெல்லாம் ராஜா போகத்தில் திளைத்த மன்னர்களையும் அவர்களது ராஜ பராக்கிரமங்களையும் பற்றிய ஆவணப்படங்களாகவே இருந்தது!!! அனால் இது அப்படியில்லாமல் நமக்கு ஒரு புது அரசனை அறிமுகப்படுத்தியது!!!அரசனை மட்டுமில்லாமல் பார்த்திபன் எனும் மாபெரும் நடிகனையும் சேர்ந்தே அறிமுகப்படுத்தியது!!!!

போர் ஆபரணங்கள் சூழ கோபம் கக்கும் அந்த சிவந்த கண்களில் அறிமுகமாகும் காட்சியா???, தஞ்சை திரும்புவோம் என்ற ஆனந்தத்தில் மக்கள் திளைத்துக்கொண்டிருக்க, அதில் தானும் கலந்து கொண்டு கார்த்தியுடன் இவர் நடனமாடும் காட்சியா?? ரீமா சென்னால் தான் நம்பவைத்து ஏமாற்றப்பட்டோமே என தெரிந்து தன் மக்கள் முன் கலங்கி நிற்பாரே அந்த காட்சியா??? இவை அனைத்திற்கும் மேலாக நடிப்பில் சிகரம் தொட்ட காட்சியாக நான் கருதுவது, தன் மக்களுடன் கைது செய்யப்பட்டு, உயிர் பிரியும் தருவாயில் தஞ்சை செல்ல கப்பல் வருவதாக இவர் எண்ணிக்கொண்டு குருதி வழியும் முகத்தில் வலியுடன் கூடிய ஒரு சிரிப்பை உதிர்ப்பாரே!!! அப்பப்பா!!! திரையின் ஊடே தனது வலியை நமக்கு கடத்தியதாக என் உணர்வு!!!!நாம் ஒரு சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து தன் நடிப்பில் (நடிப்பு என்று சொல்லலாமா என தெரியவில்லை) என்னை பலமுறை அழவைத்தது கமல் அவர்கள் மட்டுமே!!! அதன் பின் பார்த்திபன், இந்தப்படத்தில்!!!!

பார்த்திபன், ஆயிரத்தில் ஒருவன் இசை வெளியீட்டின்போது சொன்னார் இந்த படத்திற்காக ராஜாவாகவே வாழ்ந்தேனென்று!!!!

உண்மை!!!

அடுத்ததாக படத்தில் வரும் துணை கதாபாத்திரங்களான, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், பிரதாப் போத்தன் என அனைவரும் தங்கள் பொறுப்புணர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்கள்!!!!

ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பு:

செல்வாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த அரவிந்த் கிருஷ்ணாவை விடுத்தது (இவர் யாரென்று தெரியாதவற்கு, குருதிப்புனல் படத்தில் “தனுஷாக” நடித்தவர் இவரே) ஒரு மாற்றத்திற்காக இந்தப்படத்தில் ராம்ஜியுடன் இணைந்தார் செல்வா!!! அதன் பின் இவர் ஒளிப்பதிவில் செய்து காட்டிய ஜாலத்தை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்து கொள்ளலாம்!!!

பி.சி.ஸ்ரீராம் பட்டறையில் இருந்து வந்த இவர், அவரின் உதவியாளராக தேவர் மகன், திருடா திருடா, மீரா, அமரன் படங்களில் பணியாற்றி இருக்கிறார்!! “வள்ளல்” படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவரது “ராம்”, “மௌனம் பேசியதே”, “பருத்தி வீரன்”, “டும் டும் டும்” படங்களை பார்த்தாலே இவரது ஒளிப்பதிவின் தன்மையை புரிந்து கொள்ளலாம்!!!

ஆம், ராம்ஜி எப்போதும் தன் படங்களில் இயற்கை ஒளி மற்றும் ஒருவித “DARK” ஆன “COLOR TONE”- ஐ அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்!!! (இவரது “இரண்டாம் உலகம்” இதற்கு விதிவிலக்கு)!!!அதை ஆயிரத்தில் ஒருவனில் பல மடங்கு மெருகேற்றி, 50 சதவீதம் VFX-ஆல் நிறைந்த இந்தப்படத்தை எந்தவித உறுத்தலுமில்லால் திரையில் கொண்டுவந்திருப்பார்!!!உதாரணமாக, படத்தின் இறுதியில் பார்த்திபன் தவழ்ந்து கொண்டே நதிக்கரை ஓரத்திற்கு சென்று தஞ்சை செல்ல கப்பல் வருவதை காண்பதாக ஒரு காட்சி வரும்!!! அதை இன்னொருமுறை பார்க்கும்போது சற்று கவனித்துப்பாருங்கள்!!! அதிலுள்ள கேமரா கோணங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளிப்பதிவின் கலர் டோன், இசை, நடிப்பு என பலவகையிலும் உங்களை ஆச்சரியப்படுத்தும்!!!!

ராம்ஜியின் உழைப்பிற்கு கொஞ்சம் கூட சளைக்காமல் இருக்கும் ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் உழைப்பு!!! பட ஆரம்பித்திலிருக்கும் கப்பல் துறைமுகத்திலிருந்து, பழங்குடியினரின் இடம், பாம்பு மண்டபம், நடராஜர் சிலை, சோழர்கள் வாழும் குகை, ஆபரணங்கள் என ஒவ்வொன்றும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன!!!! இவை அனைத்தும் பலவித வாசிப்புகள் மூலமாகவும், பல வரலாற்று அறிஞர்களின் துணை கொண்டும் திறம்பட அமைத்திருப்பார்!! இந்த படத்திற்காக மட்டும் மொத்தம் 18 அரங்கங்களை அமைந்திருந்ததாக ஒரு பேட்டியில் சொல்லிருந்தார்!!!!!!!!!அடுத்ததாக படத்தின் எடிட்டர் கோலா பாஸ்கர்!!! “குஷி” படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவரும் செல்வாவும் “7G” படத்தின் மூலம் இணைந்தனர்!!!! அன்றிலிருந்து இன்றுவரை வெளியான செல்வாவின் அனைத்துப் படங்களுக்கும் இவர்தான் ஆஸ்தான எடிட்டர்!!!

இந்தப்படத்தில் பல இடங்களில் உள்ள தேவையற்ற காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னமும் வரவேற்பை பெற்றிருக்கும் என்பது பல விமர்சனர்களின் கருத்து!!! படம் 3-மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவதாலோ என்னவோ பலருக்கும் இது அயர்ச்சியை கொடுத்திருக்கலாம்!!!!

ஒருவேளை, இவர்களும் பாகுபலி போல முதல் பாதி முழுவதும் சோழர்களை தேடிய பயணத்தையும் இரண்டாம் பாதியில் சோழ-பாண்டிய போரைப்பற்றியும் விரிவாக எடுத்திருந்தால் வரவேற்பை பெற்றிருக்குமோ என்னவோ!!!

ஜி.வி.பி:

யுவனின் இசைக்கோர்வையுடன் தொடங்கப்பட்ட இந்தப்படம்!!! இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் யுவன் விலகிக்கொள்ள, செல்வா இணைந்தது ஜி.வி.பிரகாஷிடம்!!!! இதற்கு முன் செல்வா-யுவன் இணைப்பில் உருவான துள்ளவதோ இளமை, காதல் கொண்டேன், 7G, புதுப்பேட்டை பட பாடல்களின் இசை பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தவை!!!

ஆதலால் யுவனின் பிரிவிற்குப்பின் GVP-யிடம் செல்வா இணைந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது!! ஏனெனில் அது GV திரைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற போராடிக்கொண்டிருந்த சமயம்!! இவரால் இந்தக்கதை களத்திற்கு ஈடான இசையை கொடுக்க முடியுமா?? என்பதும், செல்வாவின் முந்தைய படங்களின் பாடல்களை போல் ஹிட் கொடுக்க முடியுமா? என்பதும் பலரது கேள்வியாக இருந்தது. இத்தனை விமர்சனத்திற்கும் பதிலாக இவர் தந்த இந்தப்படத்தின் பாடல்களாகட்டும் பின்னணி இசைக்கோர்ப்பாகட்டும் இன்னாள் வரை இவரது “கேரியர் பெஸ்ட்” ஆக இருக்கிறது!!!என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு இசையமைப்பாளருக்கு ஒவ்வொரு விதமான தனித்தன்மையிருக்கும்!!! உதாரணமாக நாம் எவ்வளவோ கிராமியப் பாடல்களை கேட்டிருப்போம் ஆனால் இளையராஜா அவர்களை போல் அதில் ராஜாங்கம் செய்தவர் எவரும் இல்லை!! “அன்னக்கிளி” தொடங்கி “தாரை தப்பட்டை” வரை இவரை அடித்துக்கொள்ள யாருமில்லை என்பது என் கருத்து!!!

அதேபோல் ஜி.வியின் ஸ்பெஷல், மனதை மயக்கும் காதல் பாடல்கள் தான்!!! வெயில் படத்தில் “உருகுதே மருகுதே”வில் ஆரம்பித்த இவர் அங்காடி தெருவின் மூலம் பலருக்கும் பரிட்சயமானார்!!! “உன் பேரை சொல்லும்போதே“, “கதைகளை பேசும்“, “பூக்கள் பூக்கும் தருணம்”, “யாத்தே யாத்தே”, ”ஆரிரோ”, “பிறை தேடும் இரவிலே”, “யாரோ இவன்” பாடல்களை கேட்டுவிட்டு இவரது தற்போதைய இசையை பார்க்கும்போது சிவாஜி படத்தில் வரும் “நீ திரும்பவும் அமெரிக்காவுக்கே போய்டு சிவாஜி” வசனம் தான் ஞாபகம் வருகிறது!!!!!!

ஆம், GVP-யின் இப்போதைய இசை அவருடைய பழைய பரிமாணத்தில் ஒரு பங்கு கூட இல்லையென்பதே நிதர்சனம்!!! சரி, ஆயிரத்தில் ஒருவனின் இசையை பற்றிப்பார்ப்போம்!!!

இந்தப் படத்தினை முதலில் பாடல் பதிவுடன் துவங்க ஆசைப்பட்டார் செல்வா!! யுவனும் அதற்கான டியூனை தர, ஜோரூராக பாடல் காட்சி படமாக்கப்பட்டது!!! ஆனால் பிரச்சனை காரணமாக யுவன் விலகிக்கொள்ள, அந்த டியூன் “சர்வம்” படத்தில் பயன்படுத்தப்பட்டது!!! ஏற்கனவே படமாக்கப்பட்ட இந்தப்பாடலை நடிகர்களின் வாயசைவிற்கு ஏற்றவாரு இன்னொரு மெட்டில் போட்டிருப்பார் ஜீ.வி!!!!! அதுதான் “உன் மேல ஆசைதான்” பாடலும் “அடடா வா அசத்தலாம்” பாடலும்!! ஒரு முறை வேண்டுமானால் இரண்டையும் கேட்டு பாருங்கள்

மொத்தம் 10-பாடல்கள் கொண்ட இதன் இசைத்தட்டில், முதலில் ஒலிப்பது “கோவிந்தா கோவிந்தா வெங்கட்ராமனா கோவிந்தா” என்ற பக்திப்பாடலின் சாயலில் மேற்கத்திய பாணியில் உருவான ” ஓ…ஈசா….”!!! கடவுளை ராப் இசைக்கு கொண்டுவந்திருந்த பாடல்!!! படமாக்கப்பட்ட விதத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது!!

ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலில், செல்வாவின் காதல் வரிகளில் மென்மையான கிட்டார் மற்றும் பியானோ இசையில் அமைந்த “மாலை நேரம்” பாடல்!!! ஆண்ட்ரியாவின் ஆங்கிலோ இந்தியன் உச்சரிப்பு பல இடங்களில் உருத்தித்தெரிந்தாலும் அவரது குரல் அதை மறக்கச்செய்து விடும்!!! இதே பாடலை GV தனது குரலிலும் பதிவு செய்திருப்பார்!!!

இந்த இசைத்தட்டின் ஆகச்சிறந்த பாடல்கள், “தாய் தின்ற மண்ணே” மற்றும் “பொம்மானே“!!!! இந்தப் பாடல்கள் ஒலிக்கப்பெறும் காலம் 13-ஆம் நூற்றாண்டு என்பதால், அதற்கேற்றாற்போல் பழைய இசைக்கருவிகளை தேடி பலவித ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்பகளுக்கு பிறகு யாழ், ருத்ர வீணை போன்ற வழக்கொழிந்த இசைக்கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்திருப்பார்!!!

இந்தப் பாடலின் வரிகளை கேட்கும்போதெல்லாம் முதலில் தோன்றுவது, கவிப்பேரரசு என்பது ஒருவர் மட்டுமே என்று!!!!! வேண்டுமானால், இதன் வரிகள் பல்வேறு வலைத்தளங்களில் கிடைக்கிறது. ஒரு முறை கவனித்து படித்துப் பாருங்கள், நான் சொல்வது நூறுசதவீதம் உண்மை என நீங்களும் சொல்வீர்கள்!!!

அதேபோல் இந்தப்பாடலின் இடையில் தெலுங்கு வரிகள் வருவதை கவனித்திருக்கலாம்!!! நமது பண்டைய ராஜாக்கள் தமிழுடன் தெலுங்கையும் வழக்கு மொழியாக வைத்த்திருந்தனர் என்பது வரலாற்று உண்மை!!! அதை செல்வா கச்சிதமாக பாடலின் இடையில் இணைத்திருப்பார்!!!!இவரது வரிகளில் விளைந்த இன்னொரு பாடல் “பொம்மானே“!!!! இந்த பாடலை எப்போது கேட்டாலும் உயிர்ப்போடு, நம் கண்களில் நீர் வரச்செய்வது உறுதி!!!

சோறில்லை..சொட்டுமழை நீரில்லை…

கொங்கையிலும் பாலில்லை…கொன்றையோனே!!!”

தாழ்ந்தாலும்..சந்ததிகள் வீழ்ந்தாலும்…

தாய்மண்ணில் சாகாமல்… சாகமாட்டோம்!!!!”

இந்த வரிகளை கேட்கும்போதெல்லாம், செல்வா எவ்வளவு மறுத்தாலும், நம் மனம் ஏனோ… மீண்டும்…மீண்டும்… நம்மை தமிழ் ஈழத்துக்குள் இழுத்துச் செல்கிறது!!!

அடுத்தது, முற்றிலும் DRUM பீட் மற்றும் எலக்ட்ரிக் கிட்டார் இசையில் வரும் “THE KING ARRIVES” தீம் மியூசிக்!!! ஆல்பத்தில் அவ்வளவாக கவராது, திரையயரங்கின் DTS ஓலி அமைப்பிலும் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதத்திலும் என்னை மிகவும் கவர்ந்த பாடல்!!!!

இறுதியாக இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த “THE CELEBRATION OF LIFE” என்ற தீம்!!!! மிக மெதுவான DRUM பீட், தொடர்ந்து “FLUTE” என தனித்தனியாக ஆரம்பிக்கும் இதன் இசை, பின்னர் இரண்டும் வாத்தியங்களும் இணையும்போது உண்டாகும் ஒருவித துள்ளல் இசை உங்களையும் அறியாமல் தாளம் வைக்கும்!!!

படத்தின் பாடல்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்…. அதேபோல் தான் இதன் பின்னணி இசையும்!!!! சில விமர்சகர்கள் இசை இரைச்சல் என்று குறிப்பிட்டிருந்தார்கள்!!! ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை!!! பாடல்களிலும் சரி பின்னணி இசைக்கோர்ப்பிலும் சரி ஜி.வியின் இசை பயணத்தில் இது ஒரு மைல் கல்!!!

இறுதியாக செல்வா… செல்வா… செல்வா….

துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய இவரது சினிமாப்பயணம் ஆரம்பித்தது பாலசந்தர் அவர்களிடம் என்பதை நம்பமுடிகிறதா???அப்போது பாலசந்தர் டிவி சீரியல்களை இயக்கி கொண்டிருந்த காலம், அவருடன் இருந்த செல்வாவுக்கோ திரும்ப திரும்ப ஒரே இடத்தில் படமாகிக்கொண்டிருந்த அந்த நாடக இயக்கம் பிடிக்கவில்லை!! அதனால் ஒரே வாரத்தில் அங்கிருந்து கல்தா கொடுத்தார்!!!

அதன் பின் துணிந்து துள்ளவதோ இளமைக்கு திரைக்கதை மற்றும் இயக்குனர் பொறுப்பேற்றார்!! எது சரி?… எது தவறு?…. என்று தெரியாத விடலைப் பருவத்தின் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கத்தில் திரையில் கொண்டுவந்த படம் இது!!! ஆனால் ஏனோ, டைட்டில் கார்டில் செல்வாவின் பெயருக்கு பதிலாக கஸ்தூரி ராஜாவின் பெயரே இயக்குனர் இடத்தில் இடம்பெற்றிருந்தது!!!

இதற்குப்பின் இதே மாதிரியான பல படங்கள் வெளிவந்தாலும் இதன் வெற்றியை அந்த படங்களால் அடையமுடியவில்லை என்பதே செல்வாவின் உழைப்பிற்கு சான்று!!!!

முற்றிலுமாக வெளியுலகிற்கு தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்ட படம் “காதல் கொண்டேன்!!! தனுஷ் என்னும் நடிகனின் அசுர வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்!!! தன் மீது காட்டப்படும் பெண்ணின் நேசம் காதலா??.. நட்பா?? என புரியாமல் குழம்பி நிற்கும் ஒருவனின் மனப் போராட்டங்களை பதிவு செய்த இப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமே!!!!

7G ரெயின்போ காலனி” இறந்து போன காதலியின் நினைவோடு வாழும் ஒருவனின் காதலை அழகியலோடு சொன்ன இந்தப்படமும் வெற்றி!!!

முந்தைய வெற்றிப்படங்களுக்குப் பின் இவர் செய்த முதல் பரீட்சாத்த முயற்சிதான் “புதுப்பேட்டை”!!! தமிழ் சினிமாவில் தாதா சினிமாவிற்கு என்று ஒரு எழுதப்படாத திரைக்கதை ஒன்றிருக்கிறது!!! அநியாயத்தை எதிர்த்து மக்களுக்கு உதவுவது அதேபோல், கடைசியில் நல்லவனாக மாறி போலீஸ் துப்பாக்கிக்கு மரணிப்பது என பார்த்துப்….பார்த்து… சலித்த காட்சிகளை கொண்ட படங்களுக்கு மத்தியில் அதன் சுவடுகளே இல்லாமல் வெளிவந்தது தான் புதுப்பேட்டை!!!! படம் வெளியானபோது சீண்டாடப்படாமல் இப்போது கொண்டாடப்படும் இந்தப்படம் செல்வாவை முன்னணி அந்தஸ்திற்கு உயர்த்தியது!!!!

ஆனால் இப்படத்தின் தோல்வி செல்வாவை தெலுங்கிற்கு அழைத்து சென்றது!!! அங்கு இவர் இயக்கிய “ஆடவரி மாட்டாலாக்கு அர்தாலு வேறுலே” (யாரடி நீ மோகினி) மிகப்பெரிய வெற்றியடைந்தது!!! மீண்டும் தமிழுக்கு வந்து அவர் தொடங்கியது தான் “ஆயிரத்தில் ஒருவன்”!!!

இந்தபடத்தின் திரைக்கதைக்கு மட்டுமல்லாது, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆடைகள், போர்க் கருவிகள், ஆபரணங்கள், இசை, ஒளிப்பதிவு, சோழர்கள் பேசும் தமிழுக்கான தேடல்கள் என ஒவ்வொன்றும் செல்வாவின் உழைப்பை சொல்லும்!!!

உதாரணமாக, ஜி.வி மற்ற இயக்குனர்களுடன் இணைந்து தந்த பாடல்களையும் செல்வாவோடு இணைந்து தந்த பாடல்களையும் கவனித்து பாருங்கள்!! (இது யுவனுக்கும் பொருந்தும்) செல்வா பாடல்களுக்குத்தரும் மெனக்கடலை தெரிந்து கொள்ளலாம்!!!!

இப்படத்தின் திரைக்கதைக்கான செல்வாவின் உழைப்பிற்கு சான்றாக,

படத்தில், சோழர்கள் இடத்தை அடைய வேண்டுமானால் மனித உயிரை கொள்ளும் கடல் வாழ் உயிரினம், நர மாமிசமுண்ணும் பழங்குடியினர், காட்டுவாசிகள், பாம்புகள்,, பசி, புதைகுழி மற்றும் கிராமம் போன்ற ஏழுவிதமான தடைகளை கடக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது!!!!

சற்று யோசித்துப்பாருங்கள், செல்வா நினைத்திருந்தால் அந்த ஏழு விதமான தடைகளையும் ஏன் உடல் வலிமையை காட்டும் சாகசங்கள் மூலம் கடந்து விடுவது மாதிரியே காட்சிப்படுத்திருக்க முடியாது???!!! ஆனால், அவ்வாறு செய்யாமல் சோழர்களின் திறமையை விளக்குவதற்கான காட்சிகளாக அந்த 7 தடங்கல்களை பயன்படுத்திக்கொண்டார்!!! எப்படி?

முதலில் பழங்குடியினரால் அங்கு சென்றால் உயிர்பலி ஏற்படும் என பயமுறுத்தப்படுகின்றனர்!!! அதன் பின்னும் பயணத்தை தொடரும் அவர்களை வினோத மீன்கள் மட்டும் நர மாமிசர்களால் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்!!! அத்தோடு பயணக்குழுவிற்கும் மனிதர்களுக்குமுண்டான தொடர்பு துண்டிக்கப்படுகிறது!! ஏற்கனவே உயிர்பலி ஏற்பட்டு பயத்தில் துவண்டு இருக்கும் அவர்களுக்கு பாம்புகளின் மூலம் அடுத்த தடையை உண்டாக்கி அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்!!!! அதன் பின் ஏற்படும் அலைச்சலும் பசியும் அவர்கள் உடலை மட்டுமல்லாது மனதளவிலும் சோர்வாக்குகிறது!!!

அடுத்ததாக வரும் அந்த நடராஜர் சிலை புதைகுழி, அவர்களது உடல் வலிமைக்கு மட்டுமல்ல அறிவிற்குமான சவாலானது!!! ஒருவன் பசி மட்டும் அயற்ச்சியில் அவ்வாறு யோசிப்பது கடினம், இதையும் தாண்டி வருபவர்களுக்கு இறுதி தடையாக நிற்பது “கிராமம்”!!! மனித புத்தியை பேதலிக்க வைக்கும் ஓசைகளை எழுப்பவிட்டு அவர்களை பைத்தியமாக அலையவிடுவது!!!அதாவது ஒவ்வொரு தடையிலும் அவனை மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக்கி அவனுடைய அறிவுத்திறனை மழுங்கடித்து பேதலிக்க செய்வதே இந்த தடைகளின் நோக்கம்!!!! அதுமட்டுமில்லாமல், எவன் ஒருவன் இந்த வித சோதனைகளை தாண்டி நம் இடம் வருகிறானோ அவனே நம் தூதுவன் என்று நம்பப்படுவதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்!!! படத்தின் முதல் பாதி இவ்வாறான தேடல்களும் சாகசங்களும் நிறைந்திருக்க, இரண்டாம் பாதியில் முக்கால்வாசி சோழர்கள் குகையிலேயே பயணப்பட்டிருக்கும்!!! அங்கே சொல்லப்பட்டிருக்கும் பல விடயங்களை நான் முன்னமே சொல்லிவிட்டேன்!!

கடைசியாக,

செல்வாவின் கதைக்களம் ஒன்றும் புதுமாதிரியானவை அல்ல, நாம் எப்போதும் பார்த்து பழக்கப்பட்டவைதான் !!! ஆனால் அவற்றை தன் திரைக்கதையின் மூலமாக மிகவும் வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்திருப்பார்!!! தனது முந்தைய படங்களின் வெற்றியை கொண்டு அதே போல் வருடத்திற்கு பல படங்கள் படங்கள் எடுத்து கல்லா கட்டியிருக்க முடியும்!!!!!!

ஆனால் அவ்வாறு செய்யாமல் தமிழ் திரைத்துறைக்கு புதிதாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டு புதுப்பேட்டையில் மாற்றத்தை தொடங்கி வைத்தார், தோல்வி!!! அடுத்ததாக தமிழசினிமாவிற்கு முழுநீள பாண்டஸி திரைப்படமாக ஆயிரத்தில் ஒருவனை தந்தார்!!! தோல்வி!!! அடுத்ததாக மறுபடியும் ஒரு பாண்டஸி படமாக இரண்டாம் உலகம்!! தோல்வி!!!!

என்னை பொறுத்தவரையில் கமல்ஹாசன் அவர்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு சில இயக்குனர்களில் செல்வாவும் ஒருவர்!!!

ஒருமுறை , இந்தப்படம் பற்றி என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது “நீங்க சொல்றதெல்லாம் OK-ங்க, BUT, இத FAMILY- யோட உக்காந்து பார்க்க முடியுமா?? ஒரே கலீஜ்”!!! னார்…

அப்போது, அவர் வீட்டு தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நான்கு வயது சிறுவனும் சிறுமியும் இரட்டை அர்த்தப்பபாடலை ஒருவித ஏற்ற இரக்கங்குளுடன் பாடிக்கொண்டிருக்க அவர்களது அம்மாவோ அதை ரசித்துக்கொண்டிருந்தார்கள்!!! அந்த ஷோவின் நடுவர்களோ அந்த பாடலுக்கு இன்னமும் மூட் தேவை என கமெண்ட் செய்துகொண்டிருந்தார்கள்!!!

அமைதியாக எழுந்து வந்துவிட்டேன்!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

One Comment on “ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *